முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:
“பிஹார் இந்தத் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக சூரத்தில் வசிக்கும் பிஹாரி சகோதரர்கள் இந்த வெற்றியில் பங்கெடுத்த மகிழ்ச்சியை கொண்டாடலாம். குஜராத் மக்களால் நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, நாம் மாநில வளர்ச்சியை இந்தியாவின் முன்னேற்றத்துடன் இணைத்து முன்னெடுத்தோம்; இதை பிஹார் மக்கள் நன்றாக அறிவார்கள். எங்கள் அடிப்படை நோக்கம் தேசம் முதலில் என்பதே.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தோல்வியடைந்த மகா கூட்டணிக்கும் இடையே 10% வாக்கு வித்தியாசம் உள்ளது. இது பொதுவான வாக்காளர்கள் ஒருமனதாக தீர்மானித்ததைக் காட்டுகிறது. பிஹாரின் வளர்ச்சியை நோக்கி மக்கள் கொண்டுள்ள தெளிவான விருப்பத்தின் வெளிப்பாடுதான் இது.
பெண்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து பிஹாரில் மிக வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இது பிஹார் அரசியலின் எதிர்கால அடித்தளத்தை பலப்படுத்தும். இதற்கிடையில், சில தலைவர்கள் சாதி வெறியைத் தூண்ட முயன்றாலும், பிஹார் மக்கள் அதனை முழுமையாக நிராகரித்துவிட்டனர்.
பிஹாரில் பொது நிலங்கள் வக்பு சொத்துகளாக மாற்றப்பட்டதை நாம் கண்டோம். தமிழ்நாட்டிலும் இதே நிலை ஏற்பட்டது—பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களும் கிராமங்களும் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டன. அதனால் தான் வக்பு சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தோம். பிஹார் மக்கள் இத்தகைய வகுப்புவாதத்தை நிராகரித்து, வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் — இந்த மூன்றையும் நாடு நிராகரித்துவிட்டது. காங்கிரஸை இப்போது யாராலும் காப்பாற்ற முடியாது. பழங்குடியினர் நலனுக்கு பாஜக எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. அவர்களுக்கு நேரும் அநீதி முடிவடையவும், வளர்ச்சியின் பலன் அவர்களைச் சென்றடையவும் பாஜக உறுதி பூண்டுள்ளது.”