ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னையின் சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான பரிமாற்றமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்குக் கொடுத்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைத்த பட்டியலை இன்று 10 அணிகளும் அறிவிக்க வேண்டும். பின்னர் டிசம்பரில் நடைபெற உள்ள மினி ஏலத்தில், அணிகள் மீதமுள்ள வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த நடைமுறைக்கு முன்பாகவே அணிகள் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
இந்த நிலையில், லக்னோ மற்றும் குஜராத் அணிகளிலிருந்து ஷர்துல் தாக்கூர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே சேர்த்துக் கொண்டுள்ளது. இதே போன்று, பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ள ஐபிஎல் அணியான சிஎஸ்கேவும், சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு ராஜஸ்தானில் இருந்து பெற்றுள்ளது. பரிமாற்றமாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜடேஜா மீண்டும் தனது பழைய அணியுடன் இணைந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 சீசன்களில் விளையாடிய சஞ்சு சாம்சன், மொத்தம் 4027 ரன்கள் குவித்துள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். அவர் சிஎஸ்கே-வில் சேருவது, தோனிக்கு அடுத்த மாற்றாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜடேஜா வெளியேறியிருப்பது, சிஎஸ்கே அணியின் ஸ்பின் பிரிவுக்கு ஒரு சவாலாகும். வரவிருக்கும் மினி ஏலத்தில் தரமான இந்திய ஸ்பின்னர்களை சிஎஸ்கே இலகுவாக குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.