பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜேடியு பெற்ற வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கவர்ச்சியான தலைமையே முக்கிய காரணமாக இருந்ததாக கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் நடக்கும் முன்பே ஜேடியு 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. நிதிஷ் குமாரின் திறமையான, மக்களை ஈர்க்கும் தலைமைத்துவத்தால் தான் அந்த கணிப்பு நிஜமாகியுள்ளது.
மாற்று தரப்பு ஆர்ஜேடி கூட்டணி, நாம் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தது. ஆனால் முடிவுகள் வெளிவரும் தருணத்தில் தேர்தல் ஆணையத்தையும், மின்னணு வாக்குப் பதிவுக் கருவியையும், கூடுதல் கண்காணிப்பு முறைகளையும் குறை கூறுவதே அவர்களின் பழக்கமாகியுள்ளது,” என அவர் விமர்சித்தார்.