2026 ஃபிபா உலகக் கோப்பை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் உலகின் பல கண்டங்களில் நடந்து வருகின்றன. ஐரோப்பிய தகுதிச்சுற்றின் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் அணி, அயர்லாந்துக்கு எதிராக டப்ளினில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது.
உலகக் கோப்பை நுழைவுச்சீட்டை உறுதி செய்ய வேண்டிய முக்கியமான ஆட்டமானதால் போர்ச்சுகல் அணி வெற்றி பெறும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் அதிரடியாக விளையாடிய அயர்லாந்து அணி போர்ச்சுகலை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அயர்லாந்தின் ட்ராய்பரோட் 17-வது நிமிடத்திலும் 45-வது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வெற்றி பெற்றுத்தந்தார்.
இந்த தோல்வியால் போர்ச்சுகலின் உலகக் கோப்பை வாய்ப்புகள் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஆட்டம் மேலும் சர்ச்சைக்குள் தள்ளப்பட்டதற்கு காரணம், போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 61-வது நிமிடத்தில் ரெட் கார்டு பெற்றது. அயர்லாந்து டிபெண்டர் தாரா ஓ’ஷியாவை முழங்கையால் தள்ளியதாகக் கூறி நடுவர் நேரடியாக ரெட் கார்டு காட்டினார்.
இதன் காரணமாக ரொனால்டோ, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அர்மேனியா அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாது. அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால் தகுதிச்சுற்றை எளிதாக கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
ஃபிபா விதிகளின்படி, முரட்டுத்தனமான ஃபவுலுக்கு குறைந்தது 2 போட்டிகள், வன்முறை நடத்திற்கு 3 போட்டிகள் தடை விதிக்கப்படலாம். ரொனால்டோ மீது ஃபிபா விசாரணை நடத்தி கடுமையான தடை உத்தரவு பிறப்பித்தால், உலகக் கோப்பையின் ஆரம்ப ஆட்டங்களிலும் அவர் பங்கேற்க முடியாத நிலை உருவாகலாம்.