அமெரிக்கா எச்1பி விசாவில் வரும் வெளிநாட்டு நிபுணர்களை மூன்று முதல் ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கச்செய்து அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அனுமதிக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். பயிற்சி முடிந்த பின்னர், வெளிநாட்டு நிபுணர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கான எச்1பி விசா கட்டணம் அண்மையில் ரூ.1.32 லட்சம் முதல் ரூ.88 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நிபுணர்கள் அமெரிக்க நிறுவனங்களில் இணைவதை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய புள்ளிவிவரப்படி, எச்1பி விசா பெறுவோரில் சுமார் 75% பேர் இந்தியர்கள் ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் தனது கொள்கையை மாற்றி, “சிக்கலான மற்றும் உயர் தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறமையான நிபுணர்கள் அமெரிக்காவில் இல்லை. ஆகையால் உலகெங்கிலிருந்தும் திறமையாளர்களை அழைத்துவருவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியதாவது, முக்கிய துறைகளில், குறிப்பாக செமி கண்டக்டர்கள், கப்பல் கட்டுமானம் போன்ற துறைகள், அமெரிக்க முன்னேற்றத்திற்காக வெளிநாட்டு நிபுணர்களின் தொழில் திறன் முக்கியமாகும். இவ்வாறு பெற்ற சிறப்பு பயிற்சி அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படும்.