அமெரிக்க நிதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:
ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் உதிரிப் பொருட்களை பல நாடுகள் வழியாக இறக்குமதி செய்து வருகிறது. இந்த செயல்பாட்டை தடுக்க, ஈரானுக்கு பொருட்கள் வழங்கியதாகக் கூறப்படும் 32 நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கிறது.
சீனாவில் இருந்து யுஏஇ வழியே ஈரானுக்கு சோடியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட், செபாசிக் ஆசிட் போன்ற ரசாயனங்கள் அனுப்பப்பட்டதாகவும், இந்தியாவின் சண்டிகரில் உள்ள பார்ம்லேன் நிறுவனம் யுஏஇ மூலம் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கியதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு துருக்கி, ஹாங்காங், ஜெர்மனி, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்களும் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான பொருட்களை வழங்கி வந்ததாக கூறப்படுவதால் அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுடன் எந்த நாடும் வாணிகம் நடத்தக்கூடாது. இதை மீறுபவர்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏன் இத்தடை?
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பின்னணியில், கடந்த ஜூன் 13ஆம் தேதி ஈரானின் அணு ஆலைகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்களை இஸ்ரேல் தாக்கியது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி அமெரிக்க போர்விமானங்கள் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட முக்கிய அணுத் தளங்களை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை கையிருப்பு பெருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, ஏவுகணை மற்றும் ராணுவ ட்ரோன் உற்பத்தியை விரைவில் மீட்டெடுக்க ஈரான் உலகம் முழுவதும் இருந்து மூலப்பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.
இந்த செயல்பாட்டையே தடுக்கும் நோக்கில் அமெரிக்கா 32 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.