ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷெர்பான் ருதர்போர்டையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன் ஐபிஎல் நிர்வாகம், அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 அன்று வெளியிட வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஏலத்திற்கு முந்தைய இந்த கட்டத்தில், அணிகள் டிரேடிங் முறையில் வீரர்களை பரிமாறிக் கொள்வதும், வாங்குவதும் நடைபெற்று வருகிறது.
ஷெர்பான் ருதர்போர்ட் மும்பைக்கு மீண்டும் திரும்புகிறார்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய ருதர்போர்டை, மும்பை இந்தியன்ஸ் ரூ.2.6 கோடி மதிப்பில் டிரேடில் கொண்டு வந்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் வீரரான ருதர்போர்ட், கடந்த சீசனில் 13 போட்டிகளில் 291 ரன்கள் எடுத்தார். முன்னதாக அவர் டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணிகளில் விளையாடியுள்ளார். தற்போது அவர் மீண்டும் மும்பை அணியுடன் இணையுகிறார்.
44 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள இடதுகை பேட்ஸ்மேனான ருதர்போர்ட், மொத்தம் 23 ஐபிஎல் போட்டிகளில் 397 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மும்பை அணியில்
இந்தியா அணியின் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்குரையும் மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்துள்ளது. லக்னோ அணிக்காக விளையாடிய அவர், அதே ரூ.2 கோடி அடிப்படை தொகைக்கே மும்பைக்குப் பரிமாறப்பட்டுள்ளார்.
34 வயதான தாக்கூர், கடந்த சீசனில் மாற்று வீரராக விளையாடி 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பஞ்சாப், புனே, சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக முன்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உள்ளது.