கரீபியன் கடலில் போதைப் பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அழித்தது
கரீபியன் கடலில் நடைபெற்ற பெரும் ரகசிய நடவடிக்கையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க படைகள் தகர்த்தன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவுக்குப் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களில் ஆறு அதிவேக படகுகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்கா கண்டறிந்து, அவற்றை சுட்டு வீழ்த்தியிருந்தது. இவை பெரும்பாலும் வெனிசுலாவிலிருந்து புறப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கரீபியன் கடலில் இரவு நேரத்தில் பாதியாக நீரில் மூழ்கிய நிலையில் வேகமாக சென்ற ஒரு நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க கடற்படை ரேடார் கண்காணிப்பு மூலம் கண்டறிந்தது. அதில் இருந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால், அது போதைப் பொருள் கடத்தல் கப்பல் என உறுதி செய்யப்பட்டதும், நடுக்கடலில் அமெரிக்க படைகள் குண்டு வீசி அழித்தன.
இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் உயிருடன் பிடிபட்டனர். பிடிபட்டவர்கள் ஈக்குவடார் மற்றும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த தாக்குதல் வீடியோவை தனது “ட்ரூத் சோஷியல் (Truth Social)” பக்கத்தில் பகிர்ந்து,
“இந்த போதைப் பொருட்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தால், சுமார் 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள்,”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தகவல்படி, பிடிபட்ட இருவரும் வழக்கு விசாரணைக்காக தங்கள் சொந்த நாடுகளான ஈக்குவடார் மற்றும் கொலம்பியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த நீர்மூழ்கிக் கப்பல் ரகசியமாக கட்டப்பட்ட ஒரு கடத்தல் கப்பல் என்றும், அது கொலம்பியாவிலிருந்து மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோ நோக்கி போதைப் பொருள் கடத்த நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.