ஜேபி இன்ஃபராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான மனோஜ் கவுர், பெரும் அளவிலான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், நொய்டா–ஆக்ரா ஆறு வழிச் சாலையின் 165 கிலோமீட்டர் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களை உருவாக்கும் இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
ஜேபி விஷ்டவுன் மற்றும் ஜேபி கிரீன்ஸ் என்ற வீட்டு திட்டங்களில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான வீடுவாங்குபவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியது. கட்டப்படாத வீடுகள், தாமதம் மற்றும் பணம் திசைதிருப்பப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.
அதே வழக்கில் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டார்.
ED வெளியிட்ட அறிக்கையில்,
- ஜேபி இன்ஃபராடெக் வெளியிட்ட விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கானோர் வீடுகளுக்காக முதலீடு செய்தனர்.
- ஆனால் அந்தப் பணம் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படாமல் வேறு நோக்கங்களில் திசை திருப்பப்பட்டது.
- வீடுகள் முடிக்கப்படாததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர்.
- மொத்த மோசடி தொகை ரூ.14,599 கோடியாகும்,
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.