அமெரிக்காவில் 43 நாட்களாக நீடித்த அரசு நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று முடிவடைகிறது; புதிய நிதியாண்டு அக்டோபர் 1-ல் தொடங்குகிறது. புதிய ஆண்டுக்கான அரசு செலவின மசோதா செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் 60% வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
இம்முறை செனட் உறுப்பினர்களின் ஒப்புதல் நேரத்தில் கிடைக்காததால், அரசு அக்டோபர் 1 முதல் நிதி முடக்கத்தில் சிக்கியது. இதனால் ராணுவம், எல்லைப் பாதுகாப்பு, விமானக் கட்டுப்பாடு போன்ற அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கின; பிற அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. பல ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியின்றி இருந்தனர்.
இந்நிலையில், சில ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது — ஆதரவாக 222 வாக்குகள், எதிராக 209 வாக்குகள் பதிவானது.
பின்னர் மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்,
“இன்று நாங்கள் மிரட்டலால் பணம் பறிக்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்கிறோம். இடைக்காலத் தேர்தல்களில், ஜனநாயகக் கட்சி எவ்வாறு நாட்டை பாதித்தது என்பதை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்,”
எனக் கூறினார்.
இந்த மசோதா ஜனவரி 30 வரை அரசுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அனைத்து அரசு துறைகளும் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்றும், பணியாளர்கள் ஊதியங்களுடன் பணியில் திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.