சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற ஆண்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாடு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி, தெலங்கானா அணியை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை ஆட்கொண்ட தமிழ்நாடு அணி, 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டர் அடித்த கோலின் மூலம் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, முதல் பாதியின் கூடுதல் நேரமான 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோ இன்னொரு கோல் அடித்து கணக்கை 2-0 ஆக உயர்த்தினார்.
முழு 90 நிமிட ஆட்டம் முடிவில் தமிழ்நாடு 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. எனினும், காயங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 11-வது நிமிடத்தில், தமிழ்நாடு வீரர் ஜெர்மையா தவறுதலாக சுயகோல் அடித்தார்.
அதற்குப் பிறகு சிறப்பான பாதுகாப்புடன் விளையாடிய தமிழ்நாடு அணி, மேலும் எந்த கோலும் அனுமதிக்காமல் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தி சப்-ஜூனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றது.