மத்ய பிரதேசத்தின் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி பெண்கள் முன்னேற்றத்திற்காக தன்னலமற்ற சேவை செய்த கன்னியாஸ்திரி ராணி மரியா அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ (The Face of the Faceless) சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ட்ரை லைட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படம், இதுவரை 123 சர்வதேச விருதுகளை வென்றதுடன், 2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 136 நிமிடங்கள் ஓடும் இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் நவம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை ஷைசன் பி. உசுப் இயக்கியுள்ளார். மகேஷ் ஆனே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயபால் ஆனந்தன் கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். தயாரிப்பு பொறுப்பை சான்றா டிசூசா ராணா மேற்கொண்டுள்ளார்.
ராணி மரியாவின் உறுதியும், தன்னலமற்ற மனிதநேயப் பணியும், சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இப்படம் உலகம் முழுவதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.