மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடுகடத்த பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையை ஏற்று, கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியம் அதிகாரிகள் மெகுல் சோக்ஸியை கைது செய்தனர். நிதி மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை ஆதாரமாகக் கொண்டு இந்தியா, பெல்ஜியத்தில் இருந்து அவரை நாடுகடத்த கோரிக்கை முன்வைத்தது.
இந்நிலையில், ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, சோக்ஸியை இந்தியாவுக்கு ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர் தரப்பில் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மெகுல் சோக்ஸிக்கு விமானப் பயணத்தில் சிக்கல் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை வரவேற்ற இந்திய அதிகாரிகள், “இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு இது. நாடுகடத்தல் கோரிக்கையை ஏற்று பெல்ஜியம் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை சரியானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது,” என தெரிவித்தனர்.
பின்னணி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி ரூபாய் அளவுக்கு பெரும் நிதி மோசடி நடைபெற்றதாக வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, 2018-ம் ஆண்டு வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக சோக்ஸி இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார்.
பின்னர், அவர் ஆன்டிகுவா தீவில் தஞ்சமடைந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சிகிச்சை பெறும் நோக்கில் அவர் பெல்ஜியம் சென்றார், அங்கு கடந்த ஆண்டு முதல் தங்கி வருகிறார்.
தற்போது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு விரைவில் நாடுகடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.