தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகா போக்குவரத்து துறை அதிகாரிகள், தமிழக பதிவெண் கொண்ட சில ஆம்னி பேருந்துகள் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் இன்றி இயங்குகின்றன எனக் கூறி, சமீபத்தில் சுமார் 60 பேருந்துகளுக்கு அபராதம் விதித்திருந்தனர். மேலும், ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி சாலைவரி வசூலும் செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தது.
அதன் பின்னர், நேற்று முன்தினம் முதல் தமிழகத்திலிருந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ஆம்னி பேருந்துகள், எல்லைச் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டன. தூக்கத்திலும் பயணத்தில் இருந்த பயணிகள் பேருந்துகளில் இருந்து இறக்கப்பட்டு, வேறு வாகனங்களில் பயணிக்குமாறு கூறப்பட்டனர்.
இதனால், பலர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுமைகள் சுமந்து நடந்தே எல்லையை கடந்தனர். இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.