டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, “சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சில மருத்துவர்கள் தொடர்புடையதாக கூறப்படுவதைப் பற்றிய கவலை வெளியிட்ட அவர்,
“குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், அவர்களின் பெற்றோர், சகோதரர்கள் போன்ற உறவினர்களை விசாரிக்கும் போது தொழில்முறை ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தினரை குற்றவாளிகள் போல நடத்துவது தவறு,”
என வலியுறுத்தினார்.
மேலும் அவர்,
“குண்டுவெடிப்பு சம்பவம் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. விசாரணை முடிவில் ஜம்மு காஷ்மீர் மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது காஷ்மீர் மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கும். எனவே வெளிப்படையான விசாரணை அவசியம்,”
என கூறினார்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு பின்னணி:
செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பை புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த அவர், வெடிபொருட்கள் நிரப்பிய காருடன் டெல்லிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் சோதனையில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த அவர், செங்கோட்டை அருகே தற்கொலை தாக்குதல் நடத்தியதாக ஆரம்பக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து 42 முக்கிய தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.