திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் நடைபெறும் தனித்துவமான வழிபாட்டு மரபின் கீழ், இன்று (அக்டோபர் 4) கடல்நீர் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவன்மலை முருகன் கோயிலில், வேறு எங்கும் காண முடியாத ஒரு விசேஷ வழக்கம் நிலவுகிறது. அதாவது, கண்ணாடிப் பேழைக்குள் “ஆண்டவன் உத்தரவு” என்ற பெயரில் பொருள் ஒன்றை வைத்து பூஜை செய்வது. எந்தப் பொருள் வைக்கப்பட வேண்டும் என்பது சீரான நடைமுறைப்படி தீர்மானிக்கப்படுவதில்லை; பக்தர்களின் கனவில் முருகப்பெருமான் உத்தரவு அளித்ததாகக் கூறப்படும் பொருள் தான் அதில் வைக்கப்படும். இதுவே “ஆண்டவன் உத்தரவு” என்று அழைக்கப்படும் வழிபாடு.
முருக பக்தர்கள் தெரிவித்ததாவது: “ஒரு பக்தரின் கனவில் ஆண்டவன் தோன்றி, குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார். அந்த உத்தரவின்படி தான் பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது” என்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரைச் சேர்ந்த பவானி என்ற பெண் பக்தரின் கனவில் கடல்நீர் வைத்து பூஜை செய்ய வேண்டும் என முருகப்பெருமான் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று அந்த கடல்நீர் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த மார்ச் 6ஆம் தேதி, அதே பேழையில் பிரம்பு மற்றும் சூடம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டிருந்தது. சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு, இந்த முறை கடல்நீர் வைத்து பூஜை நடைபெற்றது என்பது சிறப்பு.
பக்தர்கள் நம்பிக்கையின்படி, கண்ணாடிப் பேழையில் வைக்கப்படும் பொருளுடன் தொடர்புடைய எந்தவொரு நிகழ்வும் பின்னர் நடைபெறும் என கூறப்படுகிறது. அடுத்ததாக எந்தப் பொருள் வைக்கப்படும் என்பது, புதியதாக எந்த பக்தரின் கனவில் வரும் உத்தரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதுவரை, பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும் கடல்நீர் பக்தர்களுக்காக காட்சிக்கு வைக்கப்படும்.