கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து வடம் பிடித்தனர்.
திருவிழா கடந்த 4-ம் தேதி அம்மன் சன்னதி முன் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் போது, தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் பல்லக்கியில், மாலையில் வாகனங்கள், சப்பரங்கள் வழியாக அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் 9-ம் நாளான இன்று, காலை 4 மணிக்கு கோயில் திறந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, 11:12 மணிக்கு ரதங்கள் நான்கு வீதிகளையும் சுற்றி முடிந்தது.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, வணிக வைசியா சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 11-ம் நாளில் (நவம்பர் 14) பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளார். அதே இரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அம்மனுக்கு காட்சி கொடுக்கப் போகின்றார். 12-ம் நாளான 15-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இவை தொடர்பான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மு.வள்ளிநாயகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.