“சவாலுக்கு காத்திருக்கிறேன்” – சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தென்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் ஒரு பகுதியாகும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என சமனில் முடித்திருந்தது. தொடர்ந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை 2-0 என வென்றது. அதேவேளையில், தென் ஆப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 1-1 என டிரா செய்திருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறினார்:
“தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த அணி தற்போதைய சாம்பியன். நாங்கள் சிறந்த ஃபார்மில் உள்ளதால் நம்பிக்கை உள்ளது.
அணியில் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கி உள்ளோம். எனது பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. நல்ல ரிதம் இருப்பதால் அதை முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறேன். வலுவான அணிகளை எதிர்கொள்ளும்போது தான் பந்து வீச்சில் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண முடியும். சவாலுக்காக நான் காத்திருக்கிறேன்.”
சமீபத்திய சுற்றுப்பயணங்களில் முகமது சிராஜ் சாதனைகள்:
- இங்கிலாந்து தொடரில்: 23 விக்கெட்டுகள்
- மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில்: 10 விக்கெட்டுகள்
சிறந்த பார்மில் உள்ள சிராஜ், தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நெருக்கடி கொடுக்கக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுகிறது.