“‘காந்தாரா: சாப்டர் 1’ வெற்றியில் மக்களுக்கும் பங்கு உள்ளது” – ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் இந்தியளவில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.700 கோடியை கடந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது.
படத்தின் வெற்றியை முன்னிட்டு, ரிஷப் ஷெட்டி முதலில் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் விமானம் மூலம் மதுரை வந்து, ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்தார்.
அதன்பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“காசிக்கு சென்றால் ராமேஸ்வரத்துக்கும் வரவேண்டும் என்பது என் நம்பிக்கை. ‘காந்தாரா: சாப்டர் 1’ படமே ஈஸ்வரனுடைய கிணறு மற்றும் நம்முடைய தெய்வத்தை மையமாகக் கொண்டது. இந்தப் படத்துக்கு மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகப் பெரிது. அந்த வெற்றியில் மக்களுக்கும் பங்கு உண்டு. படத்தை மக்களிடம் சேர்க்க முடியும்வரை ஆசீர்வாதம் கிடைத்தது — அதற்காகவே ராமேஸ்வரத்துக்கு வந்தேன். தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்தார்:
“தமிழகத்திலும் டப்பிங் செய்யப்பட்ட ‘காந்தாரா: சாப்டர் 1’ மிகுந்த வெற்றியை பெற்றது. இதற்கான பாராட்டு முழுவதும் மக்களுக்கு தான் செல்லும். விளம்பரப்பயணத்திற்கு வர முடியாதது சில காரணங்களால். இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் உள்ள நண்பர்கள் திரையரங்குகளில் படம் எவ்வளவு கொண்டாடப்படுகிறது என்பதைச் சொல்லி மகிழ்ச்சியளித்தனர். இணையத்தில் பல நல்ல விமர்சனங்களும் பார்த்தேன். அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்து மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன்,” என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்தார்.