சென்னையில் தங்கம் விலை ரூ.97,000 தாண்டியது – புதிய சாதனை
சென்னையில் தங்கம் விலை ரூ.97 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத உயர்நிலையை எட்டியுள்ளது.
அமெரிக்க அரசு H1B விசா கட்டணத்தை உயர்த்தியது, இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக குறைந்தது, மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்றைய விலையும் இதன் தொடர்ச்சியாக அதிகரித்தது. முன்தினம் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,900, ஒரு பவுன் ரூ.95,200 இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்தது. இதனால் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,200, ஒரு பவுன் ரூ.97,600 ஆகியது. இது தங்க விலையின் வரலாற்றிலேயே புதிய உச்சம் எனக் கூறப்படுகிறது.
நகை வியாபாரிகள் தெரிவிப்பதாவது, தங்கம் விலை தற்போதைய நிலை தொடர்ந்தால் விரைவில் ஒரு பவுன் ரூ.1 லட்சம் என்ற உச்சத்தைக் கடக்கும் வாய்ப்புள்ளதாகும்.
இதேநேரத்தில், 24 காரட் தங்கம் விலை நேற்று ரூ.1,06,472 ஆகவும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.203 ஆகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.2,03,000 ஆகவும் இருந்தது.