“உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இந்த தீபங்கள் சொல்கின்றன” – அயோத்தியில் யோகி ஆதித்யநாத்
தீபாவளி திருவிழாவை முன்னிட்டு, அயோத்தியில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் நடைபெற்ற தீபோற்சவ விழாவை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
விழாவில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
“இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது, ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தது சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை கதாபாத்திரமாக கூறியது காங்கிரஸ் கட்சி. இன்று அதே இடத்தில் நாம் கோடிக்கணக்கான தீபங்களை ஏற்றி ஒளிர்க்கிறோம்,” என யோகி ஆதித்யநாத் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தார்:
“இங்கு ஒளிரும் ஒவ்வொரு தீபமும் நமக்கு நினைவூட்டுவது ஒன்றுதான் — உண்மையை எந்த சக்தியும் வீழ்த்த முடியாது. சனாதன தர்மத்தின் போராட்டம் 500 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதன் விளைவாக இன்று அயோத்தியில் தெய்வீகமும் பிரம்மாண்டமுமான ராமர் கோவில் எழுந்திருக்கிறது.”
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் அயோத்தியில் லட்சக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். இது ஆண்டுதோறும் உலகச் சாதனையாக பதிவு செய்யப்படுகிறது.
அந்த தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் (9-வது முறையாக) தீபோற்சவம் நடைபெற்றது. இதில் 26,17,215 அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.