கொரோனா காலகட்டத்திலும் எந்த வகை வரிகளையும் உயர்த்த அனுமதிக்காத பிரதமர் நரேந்திர மோடி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, இன்று கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் நிர்மலா சீதாராமன் கூறினார்:
“கொரோனா காலத்தில் கூட எந்த ஒரு வரியையும் உயர்த்த பிரதமர் அனுமதிக்கவில்லை. வியாபாரிகளை குடும்ப உறுப்பினர்களைப் போலப் பார்ப்பவர் பிரதமர்.
வருமான வரி உச்சவரம்பை உயர்த்தும் விவகாரத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்தபோது, அனைவரின் கருத்தையும் கேட்ட பிறகு, அதனை ₹12 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்,”
என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பிற்குப் பிறகு, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் மாதம் வரை சுமார் 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
‘இ-காமர்ஸ்’ தளங்கள் மூலம் 22% வர்த்தக உயர்வு ஏற்பட்டுள்ளது.
மாருதி நிறுவனம் ஒரே வாரத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்துள்ளது; ஹூண்டாய் நிறுவனம் ஒரே நாளில் 11 ஆயிரம் முன்பதிவுகள் பெற்றுள்ளது.
மொத்தம் 40.23 யூனிட் ஆட்டோமொபைல்கள் மற்றும் 31.05 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிராக்டர் விற்பனை 14% உயர்ந்துள்ளது.
காப்பீட்டு துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏர் கண்டிஷனர், டிவி போன்ற மின்னணு பொருட்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.”
அவர் மேலும்,
“வியாபாரிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் பிரதமரிடம் எடுத்துச் செல்வேன்,”
என்று உறுதியளித்தார்.
விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்லு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயலாளர் ராஜ்குமார், கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய நிதியமைச்சரை பாராட்டினர்.