“இஸ்லாமாபாத் கார் குண்டு வெடிப்புக்கு இந்தியாவே காரணம்” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகம் அருகே இன்று (நவம்பர் 11) தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியாவின் கையுண்டு என குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யும் நோக்கில், இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாத அமைப்பே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதே அமைப்புதான் வானா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் காரணம். அந்த தாக்குதலில் மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய ஆதரவுடன் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனங்கள் போதாது. இதை சர்வதேச அளவில் கடுமையாக எதிர்கொள்வது அவசியம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வகிக்கும் பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்ததாவது:
“இஸ்லாமாபாத் ஜி–11 நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
காயமடைந்த 20 பேரும் அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் உள்ளனர். இது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலாளியின் தலை சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது,” என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.