‘த தின்மேன்’ தொடரின் நான்காவது படம் — Shadow of the Thin Man (1941).
“கொலையை விசாரிக்கச் சொன்னவர்தான் கொலையாளி” என்ற சுவாரஸ்யமான கோட்டில் நகரும் இந்தப் படம், நிக் மற்றும் நோரா சார்ல்ஸ் தம்பதிகளின் புதிய மர்மப் பயணத்தை நகைச்சுவையுடனும் திரில்லுடனும் காட்டுகிறது.
ஓய்வு நேரத்தை கழிக்க நிக் தனது மனைவி நோராவுடன் குதிரைப் பந்தயத்துக்கு செல்கிறார். அங்கு குளியலறையில் ஒரு ஜாக்கி மர்மமாக சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால் போலீசும் பத்திரிகையாளர்களும் கூட்டமாகச் சூழ, லெப்டினன்ட் ஏப்ரம்ஸ் விசாரணை தொடங்குகிறார்.
பந்தயக் குழுவின் துணை இயக்குநர் மேஜர் ஸ்கல்லி மற்றும் பத்திரிகையாளர் பால், இந்தக் கொலையை விசாரிக்க நிக்கை அணுகுகிறார்கள். சூதாட்டக் குழுவை நடத்தும் லிங் ஸ்டீபன்ஸ் மற்றும் ஃபிரட் மேஸியுடன் ஜாக்கி முரண்பட்டதால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவுகின்றன.
ஸ்டீபன்ஸின் காதலி மோலி, அவரின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அவளிடம் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பால் விசாரணைக்குச் செல்கிறார். அப்போது சட்டவிரோத பந்தயக் குறிப்புகள் அடங்கிய ஒரு கருப்பு நோட்டுப் புத்தகம் கைக்கிடைக்கிறது. ஆனால் அதே சமயத்தில் ஸ்டீபன்ஸின் நெருங்கிய பத்திரிகையாளர் வைட்டி பரோ, அங்கு வந்து பாலுடன் மோதுகிறார். பால் தப்பிச் செல்லும்போது, மர்ம நபர் ஒருவர் வைட்டியை சுட்டுக் கொல்கிறார்.
விசாரணையில் “ரெயின்போ பென்னி” என்ற சூதாட்டக்காரன் சம்பவ இடத்திலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. நிக், ஏப்ரம்ஸ், ஸ்கல்லி மூவரும் பென்னியின் வீட்டுக்குச் செல்வதற்குள், அவர் தூக்கில் தொங்கியபடி இறந்திருக்கிறார். ஒவ்வொரு மரணமும் புதிய மர்மத்தைக் கிளப்புகிறது — பின்னணியில் “கேம்ப்ளிங் சிண்டிகேட்” எனும் பெரிய குற்ற வலையமைப்பு இருப்பது வெளிப்படுகிறது.
‘த தின்மேன்’ தொடருக்கே உரித்தான முறைப்படி, நிக் அனைவரையும் ஒரே இடத்தில் சேர்த்து விசாரணை நடத்துகிறார். ஒவ்வொருவரிடமும் கேள்விகளைப் போட்டு உண்மைக் குற்றவாளியை வெளிக்கொணர்கிறார்.
பென்னியின் வீட்டை தவறாக அடையாளம் காட்டியவர்தான் கொலையாளி என நிக் அறிவிக்கிறார் — ஒரு சிறிய கவனக் குறைவுதான் அவனை மாட்ட வைத்தது.
இந்தப் படத்தில் நோராவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த லாண்டரி ஸ்லிப், அதில் “கிமானோஸ்”, “சிம்மிஸ்” என்று எழுதப்பட்டிருந்ததிலிருந்து, கான்சாஸ் சிட்டி, சிகாகோ போன்ற இடங்களில் இருக்கும் சூதாட்ட புக்கிகளை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.
நிக், அஸ்டாவுடன் (அவர்களின் நாய்) வந்து நிகழ்ச்சியை மீள்செய்து கொலை விபத்து அல்ல, விபரீதம் என்பதை நிரூபிப்பதும், பென்னியின் தற்கொலை ஒரு கொலை என்று காட்டுவதும் விசாரணையின் சுவையை கூட்டுகிறது. இறுதியில் “கொலை விசாரிக்கச் சொன்னவரே கொலையாளி” என்று நிக் வெளிப்படுத்தும் காட்சி சுவாரஸ்யத்தின் உச்சம்.
கிளைமாக்ஸில், வில்லன் நிக்கின் துப்பாக்கியை எடுத்து சுட முயலும்போது, நோரா நிக்கின் முன்னால் நின்று தடுக்கிறாள். ஆனால் அந்த துப்பாக்கியில் குண்டு இல்லாதது வெளிப்படுகிறது. அதற்குக் காரணம் குறித்து நிக் சொல்வது, ஒவ்வொரு தந்தையும் குழந்தை வளர்ப்பில் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடமாகும்.
அஸ்டா நாய் படத்தில் நகைச்சுவையின் முக்கியமான பங்கைக் கொள்கிறது — ராட்டினத்தில் விளையாடுவது, ரெஸ்டாரன்டில் கலாட்டா செய்வது, நிக்கின் கேள்விகளுக்கு நிர்ப்பபாவமாக நிற்பது எல்லாம் பார்வையாளரை சிரிக்க வைக்கும்.
குடும்ப நகைச்சுவை கலந்த உரையாடல்கள் — நிக்கின் பான சுவை, மகனின் “டாடி டிரிங்க் மில்க்!” எனும் கட்டளை, நோராவின் சிரிப்பு, வேலைக்காரி ஸ்டெல்லாவின் சத்தம் — அனைத்தும் குடும்ப உணர்வுடன் கலக்கிறது.
ஒளிப்பதிவு: வில்லியம் டேனியல்ஸ்.
இசை: டேவிட் ஸ்னெல்.
எடிட்டிங்: ராபர்ட் ஜே. கென்.
கதை: ஹாரி கர்ட்னிட்ஸ் (டேஷியல் ஹேம்மெட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு).
இயக்கம்: மேஜர் டபிள்யூ. எஸ். வான் டைக் (அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அனுபவத்தால் “மேஜர்” பட்டம் பெற்றவர்).
தயாரிப்பு: எம்.ஜி.எம் ஸ்டூடியோ.
கருப்பு–வெள்ளை காலத்தின் மெருகும், வினோதமான நகைச்சுவை–மர்ம கலந்த நுணுக்கமான திரைக்கதையும் கொண்ட இந்த “ஷேடோ ஆஃப் த தின் மேன்”, ஹாலிவுட் ரசிகர்களுக்கான ஒரு சினிமா விருந்து தான்.