கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு பிரான்ஸ் அரசின் “செவாலியர்” விருது
பிரான்ஸ் அரசின் உயரிய “செவாலியர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்” (Chevalier de l’Ordre des Arts et des Lettres) விருது, பிரபல கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதை தமிழ்நாட்டில் இதற்கு முன் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் பெற்றிருந்தனர்.
சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவம்பர் 13 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ தலைமையில் இந்த விருது தோட்டாதரணிக்கு வழங்கப்பட இருக்கிறது. நிகழ்வில் சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணைத் தூதர் எத்தியென் ரோலான்-பியெக், தலைவர் டி.கே. துர்கா பிரசாத், இயக்குநர் டாக்டர் பாட்ரிசியா தேரி–ஹார்ட் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அதேநேரத்தில், அங்கு தோட்டாதரணியின் ‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நவம்பர் 14 வரை நடைபெறும் இக்கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
தோட்டாதரணி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மட்டுமின்றி பிரெஞ்சு மற்றும் இத்தாலிய திரைப்படங்களுக்கும் கலை இயக்குநராக பணியாற்றியவர்.
‘நாயகன்’ படத்துக்காக மும்பை தாராவி செட், ‘சிவாஜி’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து பாராட்டைப் பெற்றவர்.