‘துள்ளுவதோ இளமை’ நடிகர் அபினய் மரணம் — கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்பு
‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்த நடிகர் அபினய் (வயது 44) இன்று காலை உயிரிழந்தார்.
அபினய் சில காலமாக கல்லீரல் தொடர்பான உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றுவந்தபோதும், இன்று அதிகாலையில் அவரது நிலைமை மோசமடைந்து உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் அபினய் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியால் அவர் ‘ஜங்ஷன்’, ‘சிங்காரச் சென்னை’, ‘பொன்மேகலை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்து, அவர் திரைப்படத்துறையிலிருந்து விலகியிருந்தார்.
அபினய் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கான பின்னணிக் குரலை அபினய்தான் வழங்கியிருந்தார்.
சமீபத்தில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைச் செலவுக்காக போராடி வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அபினய் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.