பழைய கழிவுகளை விற்று ரூ.800 கோடி வருவாய் – “7 வந்தே பாரத் ரயில்களை வாங்கும் அளவு” : மத்திய அரசு
மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களில் தேங்கியிருந்த பழைய பொருட்கள் மற்றும் கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) பதிவில் அவர் கூறியதாவது:
“2021 அக்டோபர் 2 முதல் 31 வரை மத்திய அரசு தொடங்கிய ‘சிறப்பு தூய்மை இந்தியா’ இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்பு துறை ஒருங்கிணைக்கிறது,” என்றார்.
84 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த முயற்சியின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,100 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
“இந்த வருவாய் ஒரு பெரிய விண்வெளித் திட்டம் அல்லது பல சந்திராயன் திட்டங்களின் செலவுக்கு இணையானது,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பழைய கோப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தியதன் மூலம் 923 லட்சம் சதுர அடிகள் இடம் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீபத்தில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.800 கோடி பெறப்பட்டது.
“இந்த தொகை மூலம் ஏழு வந்தே பாரத் ரயில்களை வாங்க முடியும்,” என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த மாதத்தில் மட்டும் 233 லட்சம் சதுர அடிகள் இடம் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.