குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு (Q Branch) போலீஸார் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலாக இந்தியா, பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை தாக்கியது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில் தீவிரவாதிகள் இந்தியாவில் மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என்ற எச்சரிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் மற்றும் உளவுத்துறைகள் உஷாராக்கப்பட்டன. மத்திய உளவுத்துறை கூடுதல் கண்காணிப்பையும் மேற்கொண்டது. சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த ரசாயனத் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படையினர் (ATS) காந்திநகர் அருகே அதலஜ் சுங்கச்சாவடியில் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான காரைச் சோதித்ததில் 3 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள் மற்றும் 4 லிட்டர் அளவிலான ‘ரிசின்’ என்ற நச்சு ரசாயனம் கைப்பற்றப்பட்டது.
‘ரிசின்’ என்பது ஆமணக்கு விதை கழிவிலிருந்து பெறப்படும் மிக ஆபத்தான நச்சுப் பொருள் ஆகும். இதைப் பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளில் ரசாயனத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய ஹைதராபாத் சேர்ந்த அகமது முகைதீன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
முதல் கட்ட விசாரணையில், அவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது, குறிவைத்த இடங்கள் மற்றும் தாக்குதல் வடிவங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் பின்னணியில், தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
அத்துடன், மாவட்ட உளவுப் பிரிவுகள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவுகள் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
கடல்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்குமாறு பொதுமக்களிடம் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.