சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆவேஷம்’ புகழ் இயக்குநர் ஜீத்து மாதவன் தனது புதிய திரைப்படத்துக்காக சூர்யாவை நாயகனாக தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தின் தொடக்கப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா இத்திரைப்படத்தில் மீண்டும் ஒரு காவல் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.
இதில் சூர்யாவுடன் இணைந்து ஃபகத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நஸ்ரியாவையும் இப்படத்தில் நடிக்க அழைப்புத் தந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ஃபகத் பாசில் மற்றும் ஜீத்து மாதவன் நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஃபகத் பாசிலும் நஸ்ரியாவும் இந்த புதிய திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கும் தனது மற்றொரு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், ஜீத்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் அவர் இணைவார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் நடைபெற இருப்பதாகத் தகவல்.