“தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில், இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை பெற்றார். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அணியை வெற்றிக்குத் தள்ளினார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“உலகக் கோப்பை வெற்றியை மறக்க முடியாது. கடந்த ஒரு வருடம் பல சவால்களைக் கடந்து சென்றேன். பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவற்றை சமாளிக்க முயற்சி செய்தேன். கடவுள் எனக்கு இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பை அளித்தார். அரை இறுதிக்குப் பிறகு இந்திய அணியுடன் சேர்ந்தபோது, கோப்பை வெல்ல எனது பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும் என உறுதி செய்தேன்.
இறுதிப் போட்டி மிகப்பெரிய மேடை. தொடக்கத்தில் நான் பதற்றமாக இருந்தேன், ஆனால் தன்னம்பிக்கையுடன் அமைதியாக செயல்பட்டு, திட்டத்தை களத்தில் செயல்படுத்தினோம். அணியின் ஒவ்வொருவரும் திட்டப்படி செயல்பட்டு அதனை பரிசோதித்ததால் கோப்பையை வெல்ல முடிந்தது. இறுதிப் போட்டியில் ஆல்-ரவுண்டராக விளையாடுவதில் பெருமை அடைந்தேன்.
என் சொந்த ஊர் ரோஹ்டாக்குக்கு திரும்பியபோது உற்சாக வரவேற்பைப் பெற்றேன். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். என் ரோல் மாடல் எப்போதும் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர். என் வெற்றிக்கு காரணம் என் குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி வீராங்கனைகள் என்பதில் சந்தேகமில்லை.”
வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடியை அணியுடன் சந்தித்து பாராட்டைப் பெற்றது, இது அணிக்கு ஊக்கம் அளித்தது. சுமார் 2 மணி நேரம் இந்திய அணியுடன் அவர் செலவிட்டார். விரைவில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியையும் சந்திக்க உள்ளேன் என ஷபாலி தெரிவித்தார்.