என் மார்பிங் புகைப்படங்களை பரப்பியவர் 20 வயது பெண்: அனுபமா பரமேஸ்வரன் குற்றச்சாட்டு
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது மார்பிங் புகைப்படங்களை போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் பரப்பியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்ற தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா கூறியதாவது:
“சில நாட்களுக்கு முன்பு என் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டு, என் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக நடிகர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பதிவிடப்பட்டதை அறிந்தேன். என்னைக் குறிவைத்து துன்புறுத்துவதை உணர்ந்து, அதனால் நான் வேதனையடைந்தேன்” என அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு, கேரள சைபர் கிரைம் துறை அந்த போலி சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னர் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளது. அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் என உறுதி செய்யப்பட்டுள்ளது. “அவருடைய வயதும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவர் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட வேண்டாம்” என அனுபமா முடிவு செய்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாலும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களை அவமதிப்பதற்கோ, வெறுப்பை பரப்புவதற்கோ உங்களுக்கு உரிமை கிடையாது. ஆன்லைனில் செய்யும் ஒவ்வொரு செயலும் பதிவாகும். இதுகுறித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சைபர் குற்றங்கள் தண்டனைக்கு உட்பட்டவை; இதுபோன்ற செயல்களைச் செய்யும் நபர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்” என அனுபமா பரமேஸ்வரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.