ஜப்பானின் மிக விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ ரூ.12,500
உலகில் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆகும்.
தெற்காசியாவில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் பாரம்பரியம் உள்ளது. அதே சமயம், அனைத்து நாடுகளிலும் அரிசி பொதுவான உணவுப் பொருளாக விளங்குகிறது. ஆனால் ஜப்பானின் கின்மேமை பிரீமியம் அரிசி உலகில் ஒரு ஆடம்பர அரிசியாகும்.
டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அரிசியை உற்பத்தி செய்கிறது. அரிசி உற்பத்தியில், 6 மாதங்கள் பதப்படுத்தி சுவை அதிகரிக்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டில், கின்மேமை பிரீமியம் அரிசி கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றது.
வழக்கமான அரிசியை சமைப்பதற்கு முன் இருமுறை கழுவி ஊறவைக்க வேண்டும். ஆனால் கின்மேமை பிரீமியம் அரிசி, உற்பத்தியில் முன்னதாகவே கழுவப்பட்டு ஸ்டார்ச் மற்றும் தவிடு அகற்றப்படுகிறது. இதனால் வீட்டில் சமைப்பதற்கு முன் கழுவ தேவையில்லை.
இந்த அரிசி இணையற்ற ஊட்டச் சத்துகள் கொண்டதாகவும், வழக்கமான அரிசியைவிட 6 மடங்கு அதிக லிப்போபோலிசாக்கரைட்கள் (LPS) கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று அறியப்படுகிறது.
கின்மேமை பிரீமியம் அரிசி ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மலைகளால் சூழப்பட்ட இந்த பகுதி, அரிசி உற்பத்திக்கு ஏற்ற வெப்பநிலையுடன் உள்ளது.
இந்த அரிசியின் உற்பத்தியை முன்னெடுத்தவர், டோயோ ரைஸ் கார்ப்பரேஷனின் 91 வயது தலைவர் கெய்ஜி சாய்கா. 2016-ல் அறிமுகப்படுத்திய போது, 840 கிராம் பாக்கெட் விலை 9,496 ஜப்பானிய யென் (சுமார் ரூ.5,490) ஆக இருந்தது. தற்போதைய விலை 840 கிராம் பாக்கெட் ரூ.10,548, அதாவது ஒரு கிலோ ரூ.12,557 ஆகும்.
சாய்கா கூறியதாவது, உலகின் மிக விலை உயர்ந்த அரிசிகளில் ஒன்றாக இருந்தாலும், இதன் வணிகம் மிக லாபகரமானது அல்ல. இருப்பினும், ஜப்பானிய அரிசி உற்பத்தியில் அவருடைய கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளில் இதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது.