2026 பிப்ரவரியில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படம்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம், நீண்டநாள் காத்திருப்பிற்குப் பின் 2026 பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் ஏற்கனவே 2018ஆம் ஆண்டிலேயே படப்பிடிப்பு மற்றும் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரானது. ஆனால் ஃபிஜி தீவில் நடைபெற்ற படப்பிடிப்புக்கான சான்றிதழ்கள் தாமதமானதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதால், படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இறுதி ஏற்பாடுகளை தயாரிப்பாளர் டி. சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஒருங்கிணைத்து வருகின்றனர்.
‘பார்ட்டி’ முழுக்க ஃபிஜி தீவில் படமாக்கப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையை பிரேம்ஜி அமரன் அமைத்துள்ளார்.
சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய வெங்கட் பிரபுவுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதே நாளில் ‘பார்ட்டி’ படத்தின் வெளியீட்டு திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
‘மத கஜ ராஜா’ படம் பெற்ற வெற்றியைப் போலவே, ‘பார்ட்டி’ திரைப்படமும் ரசிகர்களிடையே அதே அளவு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.