உலகக் கோப்பையில் குகேஷ் வெளியேற்றம்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரரும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றின் இரண்டாவது ஆட்டங்கள் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிலையில், உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், ஜெர்மனியின் கிராண்ட்மாஸ்டர் ஃப்ரெடெரிக் ஸ்வேனுடன் மோதினார். கடுமையான போட்டியாக நடந்த இந்த ஆட்டம் 55வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார்.
முந்தைய ஆட்டம் டிராவில் முடிந்திருந்தது. அதனால், இரு ஆட்டங்களின் மொத்தத்தில் ஃப்ரெடெரிக் ஸ்வேன் 1.5-0.5 என்ற புள்ளிகளால் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார். நாக் அவுட் விதிமுறையின்படி, தோல்வியடைந்த குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.
இதே நேரத்தில், இந்திய கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர். பிரக்ஞானந்தா, அர்மேனிய வீரர் ராபர்ட் ஹோவன்னிஸ்யனை எதிர்கொண்டு 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் தங்களின் இரண்டாவது ஆட்டங்களை டிராவில் முடித்து, முதல் ஆட்ட வெற்றியின் பலனாக அடுத்த சுற்றில் இடம்பிடித்தனர்.