நாடு முழுவதும் தாக்குதல் சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது
நாடு முழுவதும் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் (ATS) கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த கைது தொடர்பாக ஏடிஎஸ் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் கூறியதாவது:
போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சிங் பார்மர் தலைமையில், இன்ஸ்பெக்டர் நிகில் பிரம்பத், சப் இன்ஸ்பெக்டர் ஏ.ஆர். சவுத்ரி ஆகியோர் இணைந்து கடந்த ஒரு ஆண்டாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நடவடிக்கைகளில், மூவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் ஆயுதங்களை பரிமாறிக் கொண்டிருந்தபோது சிக்கியுள்ளனர்.
விசாரணையில், இவர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சமிட்டது. தற்போது, அவர்கள் தேர்ந்தெடுத்த இடங்கள், தாக்குதல் முறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு முன்னர், கடந்த ஜூலை 22 அன்று, அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பர்தின் ஷேக், சைபுல்லா குரேஷி, முகமது பாய்க், ஜீஷான் அலி ஆகியோர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், பெங்களூருவில் ஷாமா பர்வீன் என்பவரும் அதே வழக்கில் சிக்கினார்.
அந்த வழக்கில், குற்றவாளிகள் ஆன்லைனில் தீவிரவாத பிரச்சாரம் செய்ததும், அல்-கொய்தா அமைப்புக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முயன்றதும் உறுதி செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த குழுவினர் இந்தியாவில் அமைதியை சீர்குலைப்பது, அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டுவது, மற்றும் மத அடிப்படையிலான வன்முறையை ஏற்படுத்துவது போன்ற சதி திட்டங்களை தீட்டியிருந்தனர் என ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.