இந்திய ஹாக்கி அணியில் தமிழர் செல்வம் கார்த்திக்கு இடம்
31வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை இந்த மாதம் நவம்பர் 23 முதல் 30 வரை மலேசியாவின் இபோ நகரில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பெரும்பாலான மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுவண வீரர் மன்பிரீத் சிங், ஸ்டிரைக்கர் மந்தீப் சிங், கோல்கீப்பர்களான கிருஷ்ணன் பகதூர் பதக் மற்றும் சுராஜ் கார்கீரா ஆகியோர் இத்தொடரில் பங்கேற்கவில்லை.
இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பாதுகாப்பு வீரர் சஞ்சய் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த ஜுக்ராஜ் சிங் மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த முன்கள வீரர் செல்வம் கார்த்திக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது முதல் போட்டியில் நவம்பர் 23-ஆம் தேதி கொரியாவை எதிர்கொள்கிறது.
இந்திய அணி விவரம்:
கோல்கீப்பர்கள்: பவன், மோஹித் ஹொன்னஹள்ளி சசிகுமார்
பாதுகாப்பு வீரர்கள்: சந்துரா பாபி, நீலம் சஞ்சீப், யஷ்தீப் சிவாச், சஞ்சய், ஜுக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ்
நடுவண வீரர்கள்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, மொய்ரங்தெம் சிங், விவேக் சாகர் பிரசாத், முகமது ரஹீல் மவுசின்
முன்கள வீரர்கள்: சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா, செல்வம் கார்த்தி, ஆதித்யா அர்ஜுன் லலாகே, தில்ப்ரீத் சிங், அபிஷேக்