பக்தி படத்தில் என். எஸ். கிருஷ்ணனின் பகுத்தறிவு பார்வை
‘பாரிஜாதம்’ என்பது பாமா விஜயம், நரகாசுர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைச் சிறிது மாற்றி உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்.
படத்தின் முதல் பகுதி நரகாசுரனின் கதை.
தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்தி பெற்றவன் நரகாசுரன். அவனை அடக்க முடியாமல் எல்லோரும் தவிக்கின்றனர். இறுதியில், அவனை அடக்க வல்லவர் அவனுடைய முற்பிறப்பில் தாயாக இருந்தவர் — இப்போது கிருஷ்ணரின் மனைவிகளில் ஒருவரான பாமா — என்பதைக் கண்டறிகிறார் நாரதர். அதனைச் செயல்படுத்த அவர் எடுத்த முயற்சியே அந்தக் கதையின் மையம்.
அடுத்த கதையில், நாரதர் கிருஷ்ணனிடம் அரிய பாரிஜாதப் பூவை ருக்மணிக்குக் கொடுக்கச் சொல்கிறார். இதனால் பாமாவுக்கு கோபம் வருகிறது. அதன்பின் கிருஷ்ணன் மீது ருக்மணிக்கு உள்ள பக்தியும் காதலும் பாமாவுக்கு உணர்த்தப்படும் விதம் தான் அந்தக் கதையின் நெடுமை.
மூன்றாவது பகுதியில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், புளிமூட்டை ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்று கதைகளிலும் ‘பாரிஜாதம்’ முக்கியப் பங்காற்றுகிறது.
கிருஷ்ணராக டி. ஆர். மகாலிங்கம், சத்யபாமாவாக பி. எஸ். சரோஜா, ருக்மணியாக எம். வி. ராஜம்மா நடித்தனர். நாரதராக நாகர்கோவில் மகாதேவன், நரகாசுரனாக அக்காலத்தின் பிரபல குணச்சித்திர நடிகர் ஆர். பாலசுப்பிரமணியம் நடித்திருந்தார். பத்மினி – லலிதா சகோதரிகளின் சிறப்பான நாட்டியமும் இடம்பெற்றது.
படத்தை எஸ். கே. சுந்தரராம ஐயர், தனது லாவண்யா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். திரைக்கதை மற்றும் வசனம் இளங்கோவன் எழுதியது.
இயக்கம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (கற்பகம் இயக்கியவர் அல்ல) மேற்கொண்டார். இசை அமைத்தவர்கள் சி. ஆர். சுப்புராமன் மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன். படத்தில் மொத்தம் 21 பாடல்கள் இடம் பெற்றிருந்தன; அவற்றை கம்பதாசன், சந்தானகிருஷ்ண நாயுடு, பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, கே. டி. சந்தானம் ஆகியோர் எழுதியிருந்தனர்.
என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் இணைந்து பாடிய ‘பாரிஜாதப் பூ’ பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பசுவின் பெருமையைச் சொல்லும் ‘பாதுகாக்கணும், பாங்கு பார்க்கணும், பழக்கி வைக்கணும்’ என்ற பாடலும் ஹிட்டானது.
பக்தி திரைப்படமாக இருந்தாலும், பகுத்தறிவு கருத்துகளுடன் கூடிய நையாண்டி நகைச்சுவைக் காட்சிகளை என். எஸ். கிருஷ்ணன் திறமையாக உருவாக்கியிருந்தார். போலி நாரதராக புளிமூட்டை ராமசாமி நடித்த காட்சிகளில், அவர் ‘பாரிஜாதம்’ பூவுக்குப் பாரி, சாதம் கொடுக்கும் விதமான விளக்கம் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது.
ஜித்தன் பானர்ஜி ஒளிப்பதிவு செய்த இந்தப் படம், 1950 நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது. அப்போது இதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.