கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், “ஆவியை விரட்டும் பூஜை” என்ற பெயரில் பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர், “பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது” என்று நம்பி, மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அழைத்தனர்.
நேற்று காலை வீட்டுக்கு வந்த சிவதாஸ், “ஆவியை விரட்டும் பூஜை” என்று கூறி பூஜை நடத்தினார். அதன்போது, அந்தப் பெண்ணுக்கு கட்டாயமாக சாராயம் குடிக்கச் செய்து, பீடி புகைக்கச் சொல்லி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். சம்பவம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் தந்தை கோட்டயம் போலீஸில் புகார் அளித்தார்.
விசாரணை தொடங்கிய போலீஸார், மந்திரவாதி சிவதாஸ் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடியதை கண்டறிந்து, தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் அவர் திருவள்ளா பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அவருடன், அந்தப் பெண்ணின் கணவன் அகில் தாஸ் (26) மற்றும் அவரது தந்தை தாஸ் (54) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மூவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.