‘ஆட்டோகிராஃப்’ மீண்டும் திரையரங்கில் – சேரன் விளக்கம்
இயக்குநர் சேரன், தயாரித்து நடித்த ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் நவம்பர் 14ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக, படக்குழுவினர் “ஆட்டோகிராஃப் ரீயூனியன்” என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தினர்.
அதில் சினேகா, இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாண்டிராஜ், ஜெகன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசும் போது சேரன் கூறியதாவது:
“21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆட்டோகிராஃப்’ படம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் சேரவேண்டும் என்பதற்காக நாங்கள் இதை புதுப்பித்து வெளியிடுகிறோம். எனது எந்தப் படம் ஒருவரை வாழ்க்கையின் போராட்டத்தில் முன்னேறத் தூண்டினாலும், அதுவே எனக்கான வெற்றி.
‘ஆட்டோகிராஃப்’ படத்திலும் காதல் ஒரு கருவி மட்டுமே; ஆனால் அதற்குள் ‘வாழ்க்கையில் சோர்ந்து விடாதே’ என்ற செய்தி இருக்கிறது. இன்றைய தலைமுறையினர் இதைப் பார்க்கும்போது வேறுவிதமான எண்ணங்களைப் பெறலாம். நாமோ விதைக்கத்தான் முடியும் — அதற்கான திறமை இந்தப் படத்துக்கு இருப்பதால் இதை மீண்டும் வெளியிடுகிறோம்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, “இன்றைய தரத்துக்கு ஏற்ற வகையில் முழுமையான கலர் கரெக்ஷன் செய்துள்ளோம். ரசிகர்கள் சோர்வடையாமல் அனுபவிக்க டால்பி அட்மாஸ் போன்ற நவீன ஒலி நுட்பங்களையும் சேர்த்துள்ளோம்” என தெரிவித்தார்.