ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு அறிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கான அணியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சுழற்பந்து வீராங்கனை ஸ்ரீசரணியும் இடம்பெற்றிருந்தார்.
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நேற்றுக் காலை ஸ்ரீசரணி ஆந்திராவுக்கு திரும்பியபோது, விஜயவாடா விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுடன் இணைந்து ஸ்ரீசரணி முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது, அவருக்கு ரூ.2.5 கோடி பணப் பரிசு, மேலும் குரூப்–1 அரசு வேலை மற்றும் சொந்த ஊரான கடப்பாவில் வீட்டு மனையும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதேபோல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் நேற்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு தலா ரூ.2.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.