நாடு முழுவதும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தெரு நாய் மேலாண்மை திட்டங்களை ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறைகளை 4 வாரங்களுக்குள் உருவாக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, “விலங்குகள் கருத்தடை விதிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; ரேபிஸ் நோய் தாக்கம் பல மாநிலங்களில் உள்ளதால், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் உள்ளாட்சி துறைகள் பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பின்னர் பல மாநிலங்கள் தங்களின் பதில்களை தாக்கல் செய்தன; சில மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து நேற்று வெளியிட்ட உத்தரவில், உச்ச நீதிமன்றம், தெரு நாய்கள் மற்றும் பிற விலங்குகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதை கவனித்து முக்கிய உத்தரவுகளை வழங்கியுள்ளது.
அதன்படி –
- மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் தெரு நாய்கள் மற்றும் மாடுகளை மாநகராட்சி, நகராட்சி, சாலைப் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
- அவற்றிற்கு கருத்தடை செய்யவும், தடுப்பூசி போடவும், விலங்குகள் நலச் சட்டத்தின்படி பராமரிக்கவும் வேண்டும்.
- நெடுஞ்சாலைகளில் திரியும் விலங்குகளை பிடிக்க, காவல் துறை, கால்நடை அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் ரோந்துக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
- நெடுஞ்சாலைகளில் பயணிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
- உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் ரேபிஸ் தடுப்பூசிகளை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நாய்க்கடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விளையாட்டு அரங்குகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தெரு நாய்கள் நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு மேலாண்மை முறைகள் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் தெரு நாய் மேலாண்மை திட்டங்களை ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகளை 4 வாரங்களுக்குள் இந்திய விலங்குகள் நல வாரியம் உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.