“ஏற்க முடியாதவை, வெட்கக்கேடானவை…” – கவுரி கிஷனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து
நடிகை கவுரி கிஷன் மீது பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த அநாகரிகச் செயலை கடுமையாக கண்டித்து, இயக்குநர் பா. ரஞ்சித் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
‘96’ படத்தின் மூலம் பிரபலமான கவுரி கிஷன் நடித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், யூடியூபர் ஒருவரின் உடல் எடை குறித்த அநாகரிகமான கேள்வி நடிகையைக் கடுமையாகச் சினமடைய வைத்தது. அதற்கு அவர் திடுக்கிடும் வகையில் பதிலளித்த காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டதாவது:
“நிருபரின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவை ஏற்றுக்கொள்ள முடியாததும், வெட்கக்கேடானதும் ஆகும். பெண் நடிகைகள் இன்னும் இத்தகைய அநாகரிகமான கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருப்பது, தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய நீண்ட பாதையை காட்டுகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.