“ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய்!” – பயிற்சியாளர் கடும் சாடல்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் முகமது பத்ருதீன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி மிகச் சிறப்பாக விளையாடி, இதுவரை மூன்று ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்காலுக்கு முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்தார். இருப்பினும், அவரை இந்தியா ஏ அணியிலும், தற்போது நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் தேர்வு செய்யவில்லை. தேர்வுக்குழு தலைவர் அஜித் ஆகார்கர் தலைமையில், ஷமியின் “மேட்ச் ஃபிட்னெஸ்” குறித்த சந்தேகங்களே காரணமாகச் சொல்லப்பட்டுள்ளன.
இதற்கு பதிலளித்த ஷமியின் பயிற்சியாளர் முகமது பத்ருதீன் கூறியதாவது:
“ஷமி முழுமையாக உடல் தகுதி பெற்றவர். ரஞ்சி ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்டுகள் எடுக்கும் ஒருவர் எப்படி ‘அன்ஃபிட்’ ஆக இருக்க முடியும்? அவரை திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள். இது அணித் தேர்வில் நடந்த மிகப் பெரிய தவறு,” என்றார்.
அவர் மேலும் கூறினார்:
“டெஸ்ட் அணிக்கு வீரர்களை தேர்வுசெய்வது ரஞ்சி டிரோபி திறமையின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். ஆனால் இப்போது T20 அளவுகோல்கள் வைத்து தேர்வு செய்கிறார்கள் போலிருக்கிறது. ‘மேட்ச் பிராக்டீஸ்’, ‘உடல் தகுதி’ போன்ற சொற்கள் வெறும் சாக்குகள். யார் வேண்டுமோ அவர்களையே தேர்வு செய்கிறார்கள். ஷமி நிச்சயமாக மனம் உடைந்திருக்கிறார். இருப்பினும், நான் அவரிடம் ‘தொடர்ந்து உன் ஆட்டத்தில் கவனம் செலுத்து, நீ 100% ஃபிட்; உன் செயல்திறன் தான் அவர்களை உன் பக்கம் திருப்பும்’ என்று ஊக்குவித்து வருகிறேன்.”