தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும்: துல்கர் சல்மான்
தமிழ் சினிமாவில் தன்னுடைய முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய துல்கர் சல்மான், “இந்தக் கதையை 2019ல் கேட்டபோது இருந்து இதில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செல்வா இருப்பார்; அவர் சினிமாவை மிகுந்த அன்புடன் அணுகுகிறார்.
இந்தப் படம், எங்களுக்கெல்லாம் தமிழில் மிக முக்கியமான படமாக இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி சிறப்பாக பொருந்தியவர். அவர் எங்களை விட அதிக உற்சாகத்துடன் நடித்தார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கிறது.
‘குமாரி’ கதாபாத்திரத்திற்காக பாக்யஸ்ரீ தமிழ் கற்று முழு மனதோடு நடித்திருக்கிறார். ராணாவுடன் இணைந்து பணிபுரிந்ததும் மகிழ்ச்சி. படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அனைவரும் கடினமாக உழைத்தோம்.
பீரியட் படங்கள் எப்போதும் ஒரு டைம்-டிராவல் அனுபவத்தை தரும்; அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக வடிவமைத்துள்ளார். படக்குழுவின் ஒவ்வொருவரும் உழைத்துள்ளதால், ‘காந்தா’ பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,” என்று தெரிவித்தார் துல்கர் சல்மான்.