‘காந்தா’ ட்ரெய்லர் ரிவ்யூ: ஒரு சூப்பர்ஸ்டாரின் எழுச்சியும் வீழ்ச்சியும்!
துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், பீரியட் டிராமா வகையைச் சேர்ந்தது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி வருகிறார். துல்கருடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘காந்தா’ நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
துல்கர் சல்மான் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பவர் என்பதில் ஐயமில்லை. அந்த வரிசையில், ‘காந்தா’வும் ஒரு புதிய பரிசோதனையாக தெரிகிறது.
ட்ரெய்லரைப் பார்த்தபோது, இது எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை ஒட்டிய கதையாக இருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் படக்குழு இதை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.
ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரின் எழுச்சியும், அவரை உருவாக்கியவருடன் ஏற்பட்ட ஈகோ மோதலும் — இதுவே படத்தின் மையக் கருவாக தோன்றுகிறது. ட்ரெய்லரில் வளர்ச்சி, புகழின் உச்சம், வீழ்ச்சி, வறுமை, காதல் ஆகியவை அனைத்தும் காட்சியளிக்கின்றன.
பயோபிக் வகை படங்களுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அதேபோல் ‘காந்தா’ படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது ரசிகர்கள் காத்திருக்கும் முக்கியக் கேள்வியாக இருக்கிறது.