‘யாவரும் நலம்’ விக்ரம் கே.குமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா
‘யாவரும் நலம்’, ‘24’ போன்ற படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் தனது அடுத்த திரைப்படத்தை நடிகர் விஜய் தேவரகொண்டாவை நாயகனாக கொண்டு இயக்கவுள்ளார்.
முன்னதாக ‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு நிதின் நடிக்கும் புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்த விக்ரம் கே.குமார், அதற்கான செலவு காரணமாக அதை நிறுத்தினார். பின்னர் பல கதைகளை நாயகர்களிடம் கூறிய அவர், சமீபத்தில் கூறிய கதை விஜய் தேவரகொண்டாவுக்கு பிடித்ததால் உடனே சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போது ராகுல் சங்கரந்தியான் மற்றும் ரவி கிரண் கோலா இயக்கும் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, அவை முடிந்ததும் இந்த புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
விக்ரம் கே.குமார் தெலுங்கில் ‘மனம்’, ‘ஹலோ’, ‘கேங் லீடர்’ போன்ற படங்களை இயக்கியவர். அண்மையில் வெளியான அவரது வெப் சீரிஸ் ‘தூத்தா’ பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.