ஹரியானா வாக்குத் திருட்டு சர்ச்சை: ராகுல் கூறிய பிரேசிலியப் பெண் லாரிசாவின் பதில் வைரல்!
ஹரியானா தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவர் குறிப்பிட்ட பிரேசிலியப் பெண் லாரிசா நேரியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஹரியானா தேர்தலில் 25 லட்சம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் ஒரே பெண்ணின் புகைப்படம் 22 முறை, வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளது. அந்த பெண் இந்தியர் அல்ல, பிரேசிலியர்,” என கூறியிருந்தார்.
அந்த புகைப்படத்தில் இடம்பெற்ற லாரிசா நேரி, தனது வீடியோவில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கம்:
“நண்பர்களே, அவர்கள் என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள். அது எடுக்கப்பட்டபோது எனக்கு சுமார் 18 அல்லது 20 வயது இருக்கும். இந்த விவகாரம் தேர்தல் சம்பந்தமானதா என எனக்குத் தெரியாது. ஆனால், என்னை இந்தியராக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம்! நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?”
அவர் மேலும் கூறினார்:
“நான் மாடல் அல்ல. என் நண்பருக்கு உதவுவதற்காக அந்தப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்தேன். புகைப்படக் கலைஞர் மேதியஸ் ஃபெரெரோ அந்தப் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பயன்படுத்தலாம் என அனுமதி கேட்டார்; நானும் ஒப்புக்கொண்டேன். அந்தப் புகைப்படம்தான் இப்போது இந்திய வாக்காளர் பட்டியலில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.”
அத்துடன்,
“இந்த விஷயம் வைரலானதும், ஒரு இந்திய பத்திரிகையாளர் எனைத் தொடர்பு கொண்டு நேர்காணல் கேட்டார். ஆனால் நான் பதில் அளிக்கவில்லை,” என லாரிசா கூறினார்.
இந்தச் சம்பவம் ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.