சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தாய், ஆண் நண்பருக்கு தலா 180 ஆண்டு சிறை — கேரள போக்சோ நீதிமன்றம் கடும் தீர்ப்பு
கேரள மாநிலத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அதிர்ச்சிகரமான வழக்கில், சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், 12 வயது மகளுடன் வசித்து வந்தார். பின்னர் வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால், கணவரை விட்டு பிரிந்து, அந்த ஆண் நண்பருடன் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வாழத் தொடங்கினார். தன் மகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
இந்த நிலையில், அந்த பெண்ணின் ஆண் நண்பர் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததோடு, மகளை “இந்த விஷயம் வெளியில் சொன்னால் மூளையில் பொருத்திய சிப் மூலம் தெரிந்துவிடும்” என்று மிரட்டியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்தினர் இந்தச் சம்பவத்தை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் சிறுமியை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பின்னர் தாய் மற்றும் ஆண் நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி அஷ்ரப், இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, தலா 180 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.11.7 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.