தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோயில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று (நவம்பர் 5) பெருவுடையாருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி நாளில் 60 அடி சுற்றளவு, 13.5 அடி உயரம் கொண்ட மூலவருக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடத்துவது பாரம்பரிய வழக்கம்.
அதன்படி, நேற்று காலை முதல் பெருமளவு சாதம் சமைக்கப்பட்டு, லிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, பலகாரங்கள், பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. லிங்கத்தின் மீது சாற்றப்படும் சாதம், அதனுடைய தெய்வீக ஆற்றலைப் பெறும் என்பதும், இதை தரிசிப்பதால் கோடிக்கணக்கான சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பதும் பக்தர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையாகும்.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமிருந்த சாதம் அருகிலுள்ள குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக விடப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டி இணைந்து செய்திருந்தன.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார் லிங்கத்துக்கு, ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் பூசணிக்காய், வாழைக்காய், தக்காளி, முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, வெண்டை, சுரைக்காய் போன்ற பல காய்கறிகளும், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களும், இனிப்பு வகைகளும், மலர்களும் கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.
அலங்காரம் முடிந்தபின், பொதுமக்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருவுடையாரை தரிசித்தனர்.