பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம்: கத்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இடையிலான தொடர்ச்சியான எல்லை மோதல்களுக்கு முடிவாக, இரு நாடுகளும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் தொடங்கி, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் கடுமையான சண்டைகள் வெடித்திருந்தன. இதனால் பலர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து, இரு நாடுகளின் பிரதிநிதிகள் கத்தாரின் தலைநகர் தோஹாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் துருக்கி மத்தியஸ்த நாடுகளாக செயல்பட்டன. பேச்சுவார்த்தை முடிவில், “இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதுடன், நீடித்த அமைதி மற்றும் எல்லை ஸ்திரத்தன்மைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
பாகிஸ்தான் தரப்பில், “ஆப்கானிஸ்தானிலிருந்து நடைபெறும் எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும், எல்லை பகுதியில் அமைதியை நிலைநிறுத்தவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. ஆனால், போராளிகளுக்கு தங்குமிடம் வழங்கியதாக வரும் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.
இதற்கு முன், இரு நாடுகளுக்கும் இடையேயான 48 மணி நேர தற்காலிக போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அதற்குப் பின்னர் சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தான் எல்லைத் தாண்டி வான்வழித் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், “தாக்குதலில் ஆயுதமேந்திய போராளிகள் மட்டுமே கொல்லப்பட்டனர்; பொதுமக்கள் உயிரிழப்பு எதுவும் இல்லை” என்று தெரிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலாக, ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தது.